﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா. நாகசாமி</author>
<book>பொய்யிலி மாலை</book>

<title><line>கம்பன் பாடிய கண்ணுதல் வானவன்</line></title>

<para>
<text>
கோசலை நாட்டு இளம் பெண்களின் மொழி குயிலை ஒத்திருக்கின்றன. அவருடைய நடம் மயிலை ஒத்திருக்கின்றன. "அவர் பயில் நடமோ கேகயம் நவில்வன" என்கிறான் கம்பன். இங்கு பெண்கள் ஆடுகின்ற ஆடல் மயிலின் ஆடலை ஒத்துள்ளது.  என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.  
</text>
</para>

<para>
<text>
அயோத்தி மாநகரில் ஆடல் அரங்குகள் இருந்தன. அவற்றில் மடந்தையர் ஆடுவர். அவரது வேல் போன்ற கண்களின் வீச்சு, காமம் மிகுந்த இளைஞரின் நெஞ்சத்தை உருக்குவன. அவர்களது உயிர்களோ அப்பெண்களின் இடை போல் தேயும். ஆனால் அவர்களது ஆசை மட்டும் வளர்ந்து கொண்டே செல்லும்.
</text>
</para>

<para>
<verse>
<line>அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர்</line>
<line>கருங்கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை</line>
<line>உருங்குவ; மற்று அவர் உயிர்கள் அன்னவர்</line>
<line>மருங்குல் போல் தேய்வன; வளர்வது ஆசையே</line>
</verse>
</para>

<para>
<text>
ஆடல் மகளிரான மதங்கியர், நாட்டிய நூல்களில் குறித்த விதிப்படி "ஜதி" யைத் தமது கால்களினால் மிதிப்பர். அவர் இவ்வாறு  மத்தளம், தாளம், பண்ணுக்கு ஏற்ப விதம் விதமாக நாட்டிய ஜதியை, பதங்களினால் ஆடிக் காட்டுவர். அச் "ஜதி" இவ்வகைத்தது என எடுத்து இயம்புபவை. அவர்களில் காலில் அணிந்துள்ளவை சலங்கைகளே. அச்சலங்கைகளின் ஒலியே அஜ்ஜதிகளின் வகையின்ன என ஒலிக்கின்றன. உயர்ந்த ஜதிக் கட்டுகளை ஆடும்போது நிருத்தம் மனதுக்கு இன்பம் அளிக்கும். ஜதி சிறக்க வேண்டும் ஆனால், சொல்லுக்கட்டு நன்கு அமையவேண்டும் மத்தள ஒலியும், தாளமும், பண்ணும் அதோடு இணைந்து இருந்தால்தான் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆடும் பெண்கள் ஜதியைக் கால்களால் மிதித்துத் தட்டி ஆடும்போது அவர்களது சலங்கை ஒலி இன்பம் பயக்கும். இத்துணையும் மனத்தில் கொண்டுதான் கவிச் சக்கரவர்த்தி,
</text>
</para>

<para>
<verse>
<line>பதங்களில் தண்ணுமை பாணி பண் உற</line>
<line>விதங்களின் விதிமுறை சதி மிதிப்பவர்</line>
<line>மதங்கியர். அச்சதி வகுத்துக் காட்டுவ</line>
<line>சதங்கைகள், அல்லது புரவித்தாள்களே</line>
</verse>
</para>

<para>
<text>
அவ்வாறு சத்தம் செய்வது குதிரைகளுக்கு கட்டியுள்ள மணிகளே என்கிறான்.
</text>
</para>

<para>
<text>
இங்கு மற்றும் ஒரு பொருளும் கொள்ளலாம். மதங்கியர் என்றால் யானை. யானைகள் தங்கள் கால்களில் மிதித்து வருவது மத்தளம், தாளம், பண் இணைந்த சொல்லுக்கட்டுக்கு ஏற்ப வருகின்றனவாம். அவற்றில் மணிகள் அச்சதியை கூட்டுகின்றன. அவ்வாறு ஒலிக்காதவை மலைகளே என்றும் தொனிக்கிறது. இதை மனத்திலே கொண்டு பின்னர் வந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி தமது திருவிளையாடல் புராணத்தில் மாணிக்கவாசகருக்காக சொக்கேசப் பெருமான் நரிகளைப் பரிகளாக்கி அழைத்து வந்தபோது  அப்பரிகள் ஜதி ஆடுவதுபோல் தாள் வைத்து ஓடிவந்தன என்கிறார்.
</text>
</para>

<para>
<verse>
<line>தருமப் பரதச் சௌளதத் தடைவுத்</line> 
<line>தெரியத் தனதத் தனதத் தெனவே</line>
<line>புரையற் அருகிப் புவி மெச்சிடவே</line>
<line>பருமப் பரிநற் பதம் வைத் ததுவே</line>
<line>மெத்துத் தகவும் விதமும் படவே</line>
<line>தித்தோம் தொத்தோம் தித்தீ என்றென்று</line> 
<line>ஒத்துந் தாளத் தொக்கத் தத்தித்</line>
<line>தத்தும் பரிதன் தாள் வைத்ததுவே</line>
</verse>
</para>

<para>
<text>
என்கிறார். கம்பனின் சொல்வண்ணம் இங்கே அப்படியே பிரதிபலிப்பதைக் காண்கிறோம். கவிச்சக்கரவர்த்திக்கு நிருத்தத்தில் இருந்த புலமையையும் இது எடுத்துக்காட்டும் எனலாம். ஆடல் கலையில் கவிச்சகரவர்த்தி கொண்டிருந்த ஈடுபாட்டுக்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு நிலைக்காட்சியில் காண்கிறோம்.
</text>
</para>

<para>
<verse>
<line>நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்</line>
<line>தைவரு மகரவீணை தண்னுமை தழுவித் தூங்க</line>
<line>கைவழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல</line>
<line>ஐயந்தண் இடையர் ஆடும் ஆடக அரங்கு காண்பீர்</line>
</verse>
</para>

<para>
<text>
தேன் என இனிக்கும் இன்பமான பாடலும், மகரவீணையின் இசையும், ஒன்றோடு ஒன்று நன்கு பொருந்தி இசைக்க, ஆடுகின்ற மங்கையின் கை செல்கின்ற வழியிலே கண்ணும் செல்ல, கண் செல்கின்ற வழி பாவம் விளங்க, அவ்வழியில் அவளது மனமும் செல்ல, அழகிய இடையுடைய பெண்கள் ஆடும் அரங்குகள் இருந்தன என்கிறான் கம்பன். 
</text>
</para>

<para>
<text>
இவ்வுலகில் கலை வல்லோர் அனைவராலும் பாராட்டப்பெறுவது நடராஜ தத்துவம். அந்த ஆடவல்லபெருமானின் உருவமும், அதற்குப் பின்னணியாகத் திகழும் தத்துவமும், இந்திய நாட்டில் ஏன் இவ்வுலகிலேயே மிகச்சிறந்த தத்துவமாகப் போற்றப்படுகிறது.
</text>
</para>

<para>
<image display="half" float="floatnone">images/IMG_2311.JPG</image>
<text>
விண்ணாகிய அரங்கிலே ஆடுகின்றான் அண்ணல். தேவர், கந்தர்வர்கள், கின்னரர் முதலியோர் வாழ்த்த, இசைபாட, ஆடுகின்றான் அண்ணல். அதனை அம்பரம் என்கிறோம். தேவாரம் இசைத்த பெரியோர்களும், திருமூலர் போன்ற ஆன்ற பெரியோர்களும், இவ்வாடலைப் பாடிப் பரவியுள்ளனர். இந்த அற்புதக் கூத்தை கவிச்சக்கரவர்த்தி கம்பனும் பாடுகிறான். அந்த ஆடலைப் பாடாது அவனால் இருக்கமுடியவில்லை. அதை, மிதிலை வந்தடைந்த இராமன் இரவைக் கழித்த உடன், காலையில் கதிரவன் எழுகிறான். அவ்வாறு கதிரவன் வருவதை கவிச்சக்கரவர்த்தி உவமிக்கிறான். 
</text>
</para>

<para>
<text>
கண்ணுதல் வானவனான சிவபெருமான், ஆகாயமாகிய அரங்கிலே கின்னரர்கள் இசை பாட, உலகம் ஏத்த, விண்ணவரும் வேதியரும் கரம் குவிப்ப, அலைகள் எல்லாம் முழவென அதிர, நடம் புரிகிறான். அவன் தனது சடையை விரிப்ப கதிரவனின் கதிர்கள் விரிந்தன என்கிறான் கவிச்சகரவர்த்தி.
</text>
</para>

<para>
<verse>
<line>எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த</line> 
<line>விண்ணவரும் முனிவர்களும்  வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்</line>
<line>மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன</line> 
<line>கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்</line>
</verse>
</para>

<para>
<text>
இந்த அற்புத உவமையை எங்கே எடுத்துக்கொள்ளுகிறான் என்று பாருங்கள். அண்ணலின் நடனத்தை ஆனந்தக்கூத்து என்பர். இதைப் பரமானந்தக் கூத்து என்றும் கூறுவர். அன்று கதிரவன் உதிக்கும்போதே, ஆனந்தம் மேலிடும் நிகழ்ச்சியை, இராமன் வில்லிறுத்து சீதையை மணக்கவிருக்கும் காட்சியை, பேரானந்தச் செய்தியை முன் உரைப்பான்போல் கம்பன் கூறுகிறான்.     
</text>
</para>

<para>
<verse>
<line>ஆதிபரன் ஆட அங்கை கனலாட</line> 
<line>ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட</line>
<line>பாதிமதி யாட பாரண்ட மீதாட</line>
<line>நாதமோ டாடினான் நாதந்த நட்டமே</line>
</verse>
</para>

<para>
<text>
எனப் பரமனின் ஆடலை, திருமூலரின் பாடலே குறிக்கும் .
</text>
</para>

<para>
<line>மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட</line>
</para>

<para>
<text>
என்னும் பாடலை நாம் கேட்டிருக்கிறோம். கவிச்சக்கரவர்த்தியும் பாடுகிறான்.
</text>
</para>

<para>
<verse>
<line>பானல் அம்கண்கள் ஆட பவளவாய் முறுவல் ஆட</line> 
<line>பீன வெம் முலையின் இட்ட பெருவிலை ஆரம் ஆட</line>
<line>தேன் முரன்று அளகத்து ஆட திருமணிக் குழைகள் ஆட</line>
<line>வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார்</line>
</verse>
</para>

<para>
<text>
இராமன் சீதையை மணக்கப்போகிறான் என்னும் செய்தி கேட்டு அயோத்தி மக்கள் மிதிலைக்கு எழும் வழியில் சந்திரசைல மலையைக் காண்கிறார்கள். அங்குதான் இக்காட்சியைக் காண்கிறார்கள்.
</text>
</para>

<para>
<text>
ஆடலைப் பற்றி விவரிக்கும் கம்பன் நகைச்சுவையையும் இனைத்து பாடுகிறான். சந்திர சைல மலையில் அரம்பையர் ஆடுகின்றனர். ஆடும் போது பாவம் சிறக்க ஆடுகிறார்கள். புருவங்களை வில் போல் வளைத்து இனிமையாக ஆடுகிறார்கள். ஆடி முடித்ததும் தங்களது அணிகலன்களை எல்லாம் அவர்கள் கழற்றி வைக்கிறார்கள். அப்போது மரத்தில் இருந்து தாவி வந்து கடுவன் குரங்கு எடுத்துச் சென்று தான் பூண்டு கொள்கிறது. அதைக் கண்டு பெண் குரங்கு மிகவும் மகிழ்கிறதாம். 
</text>
</para>

<para>
<verse>
<line>சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மில் ஆட</line>
<line>நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி</line> 
<line>அரம்பையர் வெறுத்து நீத்த அவிர்மணிக்  கோவை ஆரம்</line>
<line>மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உகக்கும் மாதோ</line>
</verse>
</para>

<para>
<text>
இதே போல் மற்றோர் இடத்திலும் கவிச்சக்கரவர்த்தி பாடுகிறான். சூர்ப்பனகை மூக்கறுப்புற்று ஓடி கரன், தூஷணன் இருவரையும் அனுப்புகிறாள். இராமனோடு திரிசிரஸ் முதலில் போரிடுகிறான். இராமனது பாணத்தால் அரக்கர்கள் சின்னாபின்னமாகி விழுகின்றனர். அவைகள் தலை இழந்த கவந்தங்களாகி உடல் மட்டும் ஆடுகிறது. கரங்களில் பூண்டுள்ள அவர்களது உடல்கள் மலையை ஒத்துக் காணப்படுகின்றன. மார்பில் கவசம் பூண்டுள்ள இவ்வாறு உள்ள உடல்கள் தலை அரிபட்டு பல்விதமாக ஆடுகின்றன. அந்தக் கவந்தங்கள் ஆடுவது பல்வேறுவிதமான நாடகம் ஆடும் அரம்பையரின் நடிப்பை ஒத்திருந்தனவாம்.
</text>
</para>

<para>
<verse>
<line>கேடகத் தடக்கைய கிரியின் தோற்றத்த</line>
<line>தாடகக் கலசத்த கவந்தம் ஆடுவ</line> 
<line>பாடகத்து அரம்பையர் முரள பல்வித</line>
<line>நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே</line>
</verse>
</para>

<para>
<text>
இதைக் கவந்த நாடகம் என்கிறார்.  
</text>
</para>

<para>
<text>
அயோத்தியில் ஆடலழகியரைக் கண்டோம். மிதிலையில் கண்டோம். இலங்கையிலும் காண்கிறோம். பாடுவார் பலர் அங்கு உள்ளனர் எனில் அவர்களைக் காட்டிலும் ஆடுவார் அங்கு அதிகமாம். அதற்கு இசைக் கருவி இயக்குவர் அதனினும் அதிகமாம். தேவர்கள் எல்லாம் "விழுநடம் காண்பராம்".
</text>
</para>

<para>
<verse>
<line>பாடுவார் பலர் என்னின் மற்றுஅவரினும் பலரால்</line>
<line>ஆடுவார்கள்: மற்று அவரினும் பலர் உளர், அமைதி</line>
<line>கூடுவாரிடை இன்னியம் கொட்டுவர்; முட்டு இல்</line> 
<line>வீடு காண்குறும் தேவரால் விழுநடம் காண்பார்</line>
<line>வானமாதரொடு இகலுவர் விஞ்சையர் மகளிர்;</line> 
<line>ஆன மாதரொடு ஆடுவர் இயக்கியர்; அவரைச்</line>
<line>சோனை வார்குழல் அரக்கியர் தொடர்குவர் தொடர்ந்தால்</line>
<line>ஏனை நாயகியர் அருநடக் கிரியை ஆய்ந்திருப்பர்</line>
</verse>
</para>

<para>
<text>
அங்கே அரக்கர் பெண்கள் ஆட ஆரம்பித்து விடுகின்றனர். அதுவும் கள்ளைக்குடித்துவிட்டு அந்தக் களிப்பில் ஆடுகின்றனர். கைகோர்த்துக்கொண்டு குரவைக்கூத்து ஆடுகின்றனர். இதைப் பார்த்து அழகுள்ள இடையையுடைய, பாவம் ராகம் தாளத்துக்கு ஏற்ப ஆடும் வான்மகளிர் வெட்கி தமக்குள்ளே இளநகை புரிகின்றார்களாம். 
</text>
</para>

<para>
<verse>
<line>வள்ளி நுண் மருங்கு என்ன வானவ மகளிர் உள்ளம்</line>
<line>துள்ளுற பாணிதள்ளா நடம்புரி தடங்கண் மாதர்</line>
<line>வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர்தாம் வெள்குகின்றனர்</line>
<line>கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரலைக் காண்பார்</line>
</verse>
</para>

<para>
<text>
நாட்டியக்கலை என்பது எல்லோருடைய மனத்தையும் ஈர்க்கவல்லது. முற்றும் துறந்த முனிவர்களும், வீடுபேற்றையும் துறந்து கண்டு இன்புறும் வகையில் ஈர்க்கும் கலை நயம் கொண்டது என்பது கவிச்சக்கரவர்த்தியின் கருத்து. இந்திரஜித் எய்த பிரும்மாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டு இராவணன் அவைக்கு அனுமன் வருகிறான். அங்கு பாடலும், தாளமும், மத்தளமும் கூடி இசைக்க, ஆடுபவர் காலும், விழியும் மனமும் கையோடு செல்ல, ஆடலைக் காணும்போது, அருந்தவ முனிவர்களும் விரும்பும் வீடுபேற்றையும் மறக்கச்செய்யுமாம்.
</text>
</para>

<para>
<verse>
<line>பாடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட</line>
<line>தோடு சிறு அடி விழி மனம் கையொடு தொடரும்</line>
<line>ஆடல் நோக்குறில் அருந்தவ முனிவர்க்கும் அமைந்த வீடு</line>
<line>வீடு மீட்குறும் மேனகை மேல் நகை விளங்க</line>
</verse>
</para>

<para>
<text>
கம்ப நாடன் நாட்டியம் அவ்வளவு உயர்ந்தது என்கிறான். ஆதலின் தான்,
</text>
</para>

<para>
<text>
"நாட்டியம் பின்ன ருசேர் ஜனஸ்ய பஹுதாபி எகம் சமாராதனம்" என்று மஹகவி காளிதாஸன் பாடுவான்.
</text>
</para>

<para>
<text>
இராவணனுக்கு பத்து தலைகள் அல்லவா? அனுமன் அவற்றை கண்ணுற்றான். அவற்றில் ஒரு முகம் பாடினாரின் இசை அமுதை பருகுகிறதாம். மற்றொன்று ஆடினாரின் முக பாவத்தையும் அதில் தோன்றும் சுவையையும் பருகுகிறதாம்.
</text>
</para>

<para>
<verse>
<line>பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக</line>
<line>ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த</line>
</verse>
</para>

<para>
<text>
இதில் ஒரு குறிப்பும் வைக்கிறான். நாட்டியம் என்பது பாவ ராக தாளம் என்று கூறுவார்கள். மிகச்சிறந்த நாட்டியக் கலையின் உயிர் துடிப்பாய் அமைவது முகத்தால் வெளிக்கொணரும் பாவம் ஆகும். அதைக் குறிப்பால் "ஆடினார் முகத்து அணி அமுது" என உணர்த்துகின்றான் கம்பன்.
</text>
</para>

<para>
<text>
நல்ல ஆடலை குறிக்கும் போதெல்லாம் கம்பன் மயில் போன்ற ஆடல் என்றே குறிப்பதை காண்கிறோம். அதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளை காண்போம். இந்திரசித்தன் விட்ட பிரம்மாத்திரத்தால் இலக்குவன் மயங்கி வீழ்கிறான். இராமன் துயர் வெள்ளத்தில் வீழ்கிறான். அது கண்ட தூதுவர் இராவணனிடம் சென்று ஐய நின் பகை ஒழிந்தது என்கிறனர். பெருமகிழ்வு கொண்டு இராவணன் "ஆடற் களி கொண்டு உய்மின்" என்கிறான். அடுத்து வர இருப்பதை அறியாத மூடன் செயல் ஆனதால் அதைக் களியாட்டம் என்பான் கம்பன்.
</text>
</para>

<para>
<verse>
<line>கின்னரர் முதலியோர் பாட முகத்திடைக் கிடந்த கெண்டைக்</line> 
<line>கன்னி நன்மயில் அன்னாரை நெடுங்களியாட்டம் கண்டான்</line>
</verse>
</para>

<para>
<text>
மேனகை, திலோத்தமை, ரம்பை, ஊர்வசி, ஆகிய வான்மகளிர் எல்லாம் இராவணன் ஆணை ஏற்று ஆடினராம். அவரை மயில் அன்னார் என்பான் கம்பன்.
</text>
</para>

<para>
<text>
இறுதியாக மங்கலச் செயல்கள் நடைபெறும்போது எல்லாம் நல்ல நாட்டியம் நடைபெறல் வேண்டும் என்பது மரபு. அதனால்தான் கோயில்களில் நாள்தோறும் வழிபாட்டின்போது நாட்டியம் நடைபெற்றது. இராமனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சீதையுடன் அரியணையில் அமர்ந்திருக்கிறான் அண்ணல். அந்த மங்கல விழாவில் நாட்டியம் நடைபெற்றது என கம்பநாடன் பாங்குடன் முடிப்பான். 
</text>
</para>

<para>
<verse>
<line>மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூற</line> 
<line>சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை துவைப்ப தா இல்</line>
<line>பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பொருகயல் கருங்கண் செவ்வாய்</line>
<line>பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில் மாதோ</line>
</verse>
</para>

<para>
<text>
முன்னர் அயோத்தியில் மடந்தையர் ஆடுவது மயிலை நினைவுறுத்தும் என "அவர் மயில் நடமோ கேகயம் நவில்வன" என்று கண்டோம்"
</text>
</para>

</article>
